முன்னாள் அதிமுகஅமைச்சர் எஸ் பி வேலுமணி க்கு சொந்தமான 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள்
அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த எஸ்.பி.வேலுமணி மீது கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாத் என்பவர் லஞ்ச ஒழிப்பு காவல் துறை அலுவலகத்திலும், கோவை வடக்கு கணபதிபுரம் பகுதியை சேர்ந்த திருவேங்கடம் என்பவர்காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் ஒன்றை அளித்தனர்.
அதில் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 52க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான ஒரு இடத்திலும், சென்னையில் 15 இடத்திலும், கோவையில் 35 இடத்திலும், காஞ்சிபுரத்தில் ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெறுவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மாதம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய நிலையில் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெறும் இந்த சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.