வணிக வரித்துறை சார்ந்த புகார்களை வணிகர்களும், மக்களும் தெரிவிப்பதற்கு ஏதுவாக பிரத்யேக புகார் எண்ணுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வணிகர் சங்க பிரதிநிதிகள் மற்றும் வணிகர்களுடன் துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து வணிக வரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
மேலும் இந்த கூட்டத்தில் வணிக வரித்துறை முதன்மை செயலாளர் சித்திக், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி, போலி நிறுவனங்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும், வணிகர்கள் புகார் தெரிவிப்பதற்கான கட்டுப்பாட்டு அறையும் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக தெரிவித்தார்.