ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை: விநோத வரலாறு: பாகம் 1.

SHAREஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை: விநோத வரலாறு பாகம் 1: கண்ணீர் நிலம் இரா.மன்னர் மன்னன் இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையில் நிறவெறி கொண்ட அரச குடும்பத்தினர் உள்ளதால்தான் இளவரசர் ஹாரியும் அவர் மனைவி மேகன் மார்க்கலும் அங்கிருந்து வெளியேறி உள்ளனர் – என்பது பக்கிங்ஹாம் அரண்மனை குறித்து எழுந்துள்ள புதிய சர்ச்சை. ஆனால் சர்ச்சைகள் பக்கிங்ஹாம் அரண்மனைக்குப் புதியவை அல்ல!. உலகிலேயே மிகவும் வெறுக்கப்படும் அரண்மனை என்று அழைக்கப்படும் பக்கிங்ஹாம் அரண்மனையில், அரச குடும்ப ஆண்கள் யாருமே நிம்மதியாக இருந்தது இல்லை என்றே இங்கிலாந்தின் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அப்படி என்னதான் நடந்தது பக்கிங்ஹாம் அரண்மனையில்? கடந்த கால வரலாற்றைப் பார்ப்போம் வாருங்கள். உலகின் ஒவ்வொரு அரச குடும்பத்திற்கும் தலைமுறை தலைமுறையாக பல மாளிகைகள் இருக்கும். பின்னர் ஏதாவது ஒரு மாளிகை அரண்மனையாக மாறும். இதுதான் உலக வழக்கம். ஆனால் அரச குடும்பத்தினருக்காகக் கட்டப்படாத ஒரு கட்டடம் பின்னர் அரண்மனையான விநோதம்தான் பக்கிங்ஹாம் அரண்மனை.  இந்த அரண்மனையின் பெயரில் உள்ள ‘பக்கிங்ஹாம்’ என்பது ஒரு அரசரின் பெயர் அல்ல, அந்த இடத்தில் முதன் முதலாக மாளிகை கட்டிய ஒரு பிரபுவின் பெயர். பிரபு கட்டிய மாளிகை எப்படி அரண்மனையானது? – என்று பார்க்கும் முன்னர், பக்கிங்ஹாம் அரண்மனை உள்ள நிலத்துக்கே ஒரு சோக வரலாறு உண்டு. 1566ல் இங்கிலாந்து அரசரான முதலாம் ஜேம்ஸ் மன்னருக்கு ஒரு விநோதமான யோசனை வந்தது. அப்போது உலக நாடுகள் எல்லாம் சீனாவிடம் பட்டுக்காக கையேந்தும் நிலையில், ஏன் இங்கிலாந்திலேயே நாம் பட்டு நெய்யக் கூடாது? – என்று அவர் யோசித்தார். இது நல்ல யோசனைதான். ஆனால் அதற்காக பட்டு நூலை வாங்காமல் பட்டுப் பூச்சிகளை வாங்கியதுதான் மோசமான யோசனை. பின்னர் அந்தப் பட்டுப் பூச்சிகள் வளர என்று மல்பெரி மரங்கள் நிறைந்த தோட்டம் உருவாக்கப்பட்டது. பட்டுப் பூச்சிகள் வளர்ந்த பின்னர் அவற்றின் நூலைக் கொண்டு துணியை நெய்ய நெசவாளர்கள் வேண்டுமே? – அவர்களும் அந்த மல்பெரி தோட்டத்தைச் சுற்றிக் குடியமர்த்தப்பட்டார்கள். இதனால் 4 ஏக்கரில் தோட்டம், அதைச் சுற்றி பல கட்டிடங்களில் நெசவாளர்கள் என அந்தப் பகுதியே களைகட்டியது. ஆனால் அந்த இறக்கமற்ற பட்டுப் பூச்சிகள் இங்கிலாந்தில் வளர மனமில்லாமல் தற்கொலை செய்து கொண்டன – அன்றைய மக்கள் அப்படித்தான் நம்பினார்கள். இங்கிலாந்தின் வெப்பநிலையில் வளர இயலாத பட்டுப் பூச்சிகள் கொத்து கொத்தாக செத்தன என்று பின்னர் வந்தவர்கள் இதைக் குறிப்பிடுகிறார்கள். இப்படியாக அரை நாளைக்கு அரசாங்க விடுமுறை எடுத்து ஊரே சிரிக்கும் அளவுக்கு அவமானப்பட்டார் அரசர் முதலாம் ஜேம்ஸ். இருந்தாலும் அந்த நான்கு ஏக்கரை என்ன செய்வது என்று தெரியவில்லை. அங்கு பட்டுப் பூச்சிகள் வாழாது என்பது மட்டுமே உறுதியாகத் தெரிந்தது. அதனால் மரங்கள் வளர்ந்த நிலத்துக்கு பூங்கா என்று பெயரை மட்டும் அரசர் வைத்தார். அது ஜேம்ஸ் பூங்கா ஆனது. இன்றும் பக்கிங்ஹாம் அரண்மனையில் அந்த ஜேம்ஸ் பூங்காவின் ஒரு பகுதி உள்ளது. பூங்கா என்று பெயர் வைத்தால் மட்டும் போதாது, அங்கு பூச்செடிகள், கொடிகள் எல்லாம் நட்டு வைக்க வேண்டும். ஆனால் உலகாண்ட ஆங்கிலேய அரச குடும்பத்துக்கு அது தெரியவில்லை. கோரிஸ் பிரபு என்பவர் அந்தப் பூங்காவில் மல்பெரி மரங்களை மட்டுமே வளர்த்து வந்தார். நிறைய மரங்கள், நல்ல மறைவுப் பிரதேசம், அங்கு வேறு என்ன நடக்கும்? சூதாட்டம்தான். இங்கிலாந்தின் புகழ்பெற்ற சூதாட்ட இடமாக ஜேம்ஸ் பூங்கா மாறியது. அப்போதுதான் அந்த நிலத்தில் உண்மையாகவே ஏதாவது செய்ய வேண்டும் – என்ற எண்ணம் இங்கிலாந்து அரச குடும்பத்துக்கு வந்தது. இரண்டாம் சார்லஸ் இங்கிலாந்து அரசராகப் பொறுப்பேற்றதும் அந்தப் பூங்காவில் உண்மையாகவே செடிகள், கொடிகள் மற்றும் அழகான மரங்களை நட்டார். அப்போதும் அதன் பழைய புகழ் போகாததால் பொது மக்கள் அந்தப் பக்கம் வரவில்லை. எனவே அரிய தாவரங்கள், மிருகங்கள், பறவைகள் எல்லாவற்றையும் அவர் ஜேம்ஸ் பூங்காவில் வைத்து மக்களை ஈர்த்தார். இப்போது பொதுமக்கள் அலை அலையாக வந்தார்கள். இரண்டாம் சார்லஸ் மன்னருக்கு பெருமிதம் தாங்கவில்லை.  முன்னர் அங்கே நெசவாளர்களுக்காக கட்டப்பட்டு இருந்த கட்டிடங்களை அவர் அருங்காட்சியகங்களாக மாற்றினார். அரசரின் சொந்த சேமிப்பில் இருந்த கலைப் பொருட்கள், ஓவியங்கள், வரலாற்றுச் சின்னங்கள் எல்லாம் ஜேம்ஸ் பூங்காவின் நெசவாளர் கட்டடங்களுக்கு வந்தன. ஜேம்ஸ் பூங்கா அப்போதுதான் தனது புதுப் பொலிவைப் பெற்றது. ஆனால் 1674ல் அந்தப் பூங்காவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் அனைத்து மரங்களும், விலங்குகளும், பறவைகளும், அரிய பொருட்களும் அழிந்தன. இரண்டாம் சார்லஸ் மன்னர் அவமானத்தோடு இதயத்தில் வலியை சுமந்தார். அந்த நிலம் இன்னும் சில ஆண்களின் கண்ணீருக்காகக் காத்திருந்தது… தொடரும்… SHARE