கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பாவே தொடர வேண்டும் என்று லிங்காயத்து மடாதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு 78 வயது ஆனதால், பதவியில் இருந்து விலக்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முதலில் இதற்கு மறுத்த அவர் பின் முடிவில் மாற்றம் கொண்டு பாஜக தலைமையின் உத்தரவினைப் பெற்றவுடன், தனது அடுத்தக்கட்ட நகர்வு பற்றி அறிவிப்பதாக கூறினார்.
இதனால் ஜூலை 26 ஆம் தேதியான இன்று கர்நாடக முதல்வர் மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பாவை மாற்றக்கூடாது என்று கூறி கர்நாடகாவைச் சேர்ந்த லிங்காயத்து மடாதிபதிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பெங்களூருவின் அரண்மனை மைதானத்தில் நேற்று நடந்த மிகப்பெரிய மாநாட்டில் ஏராளமான லிங்காயத்து மடாதிபதிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பலேஹோசூர் மடத்தின் மடாதிபதி திங்கலேஸ்வர சுவாமி எடியூரப்பா தலைமையிலேயே அனைத்து தீர்வுகளும் காணப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் கர்நாடகா மேலும் சிக்கல்களை சந்திக்கும் என்றும் திங்கலேஸ்வர சுவாமி கூறினார்.
ஏற்கனவே பாஜக எடியூரப்பாவை மாற்ற முயற்சித்தால் அது ஒரு சகாப்தத்தின் முடிவாக இருக்கும் என்று கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சமனூர் சிவசங்கரப்பா தெரிவித்திருந்தார்.
இதனால் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது.