இந்தியாவிலேயே அதிக மொழிகள் பேசும் மாவட்டங்களின் பட்டியலில் பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது.
ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்தை சேர்ந்த மூத்த ஆய்வாளர் ஷாமிகா ரவி, இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் பணியாற்றும் பேராசிரியர் முடித் கபூர் ஆகியோர் இணைந்து இந்தியாவில் அதிக மொழிகள் பேசப்படும் நகரம் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
இதில் 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் அதிகமான மொழிகள் பேசப்படும் மாவட்டம் கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூரு என தெரியவந்துள்ளது. அங்கு மொத்தமாக 107 மொழிகளை பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இதில் 22 இந்தியாவின் அலுவல் மொழிகளாக குறிப்பிடப்பட்டுள்ள மொழிகளாகும்.பெங்களூருவில் 44.62% மக்கள் கன்னடமும், 15% தமிழும், 14% தெலுங்கும், 12% உருதும், 6% இந்தியும் ,3% மலையாளமும், 2% மராத்தியும், 0.6% கொங்கனியும் பேசுகின்றனர்.
இதற்கு அடுத்தபடியாக நாகாலாந்தின் திமாபூர் மாவட்டத்தில் 103 மொழிகளும், அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் 101 மொழிகளும் பேசப்படுகின்றது.
குறைந்தபட்சமாக தமிழகத்தில் உள்ள அரியலூர் , புதுச்சேரியில் உள்ள ஏனாம் , உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூர் தேஹத் உள்ளிட்ட மாவட்டங்களில் 20க்கும் குறைவான மொழிகளே பேசப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.