மீண்டும் மின்வெட்டு தொடங்கியதாக குற்றம் சாட்டியுள்ள நடிகை கஸ்தூரி அமைச்சர் செந்தில் பாலாஜியை சீண்டும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல இடங்களில் மின்தடை ஏற்படுவதாக தொடர் புகார்கள் எழுந்த நிலையில், இவற்றிற்கு அணில்கள் தான் காரணம் என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
அதேசமயம் அதிமுக ஆட்சியில் கடந்த 9 மாதங்களாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி, அடுத்த சில தினங்களில் இனி மின்வெட்டு பிரச்சனை இருக்காது என்று தெரிவித்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில் மின்தடை தொடர்பாக நடிகை கஸ்தூரி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மறுபடியும் பவர் கட் ஆரம்பித்துவிட்டது. போன வாரம் எங்களுக்கு 3 மணி நேரம் தொடர்ந்து கரண்ட் இல்லை.
சென்னையை சுற்றியிருக்கும், பணக்காரர்கள் மற்றும் புகழ்பெற்றவர்கள், தங்கள் குடியிருக்கும் பகுதிகளில் கரண்ட் கட் பற்றியே யோசிக்காதவர்கள் என்று நினைக்கிறேன். ஆனாலும் இங்கு கரண்ட் கட் ஆகிறது.. உங்க ஏரியாவில் எப்படி?” என கேட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஐடியையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே சமீப காலமாக அமைச்சர் செந்தில் பாலாஜியை சீண்டி வரும் கஸ்தூரி தற்போது தெரிவித்துள்ள மின்தடை புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது பதிலடி கொடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.