அமேசான் பிரைம் தளத்தில் இந்த வாரம் வெளியாகி இருக்கும் தமிழ் காமெடி ரியாலிட்டி ஷோ “LOL – ENGA SIRI PAAPOM”. மறைந்த நடிகர் விவேக் மற்றும் நடிகர் சிவா தொகுத்து வழங்கியிருக்கிறார்கள். குறிப்பாக, இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது, வெகு நாட்கள் கழித்து நடிகர் விவேக் அவர்களை பார்க்கையில் அவர் உயிருடன் இல்லை என்பதே மறந்துபோனது என்று தான் சொல்ல வேண்டும்.
எங்க சிரி பாப்போம் நிகழ்ச்சியில் மாயா, பவர்ஸ்டார், சதீஷ், விஜய் டிவி புகழ், அபிஷேக், ஹாரத்தி, ஃபக்கி, விக்னேஷ்காந்த், பிரேம்ஜி அமரன், ஷியாமா ஹரிணி என்று பத்து காமெடி நடிகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த காமெடி நிகழ்ச்சி 25 நிமிடங்களைக் கொண்ட 6 எபிசோடுகளாக உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சி ஃபிக் பாஸ் நிகழ்ச்சியைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பத்து காமெடி நடிகர்களும் ஒரே அறையில் 6 மணி நேரம், தான் சிரிக்காமல் மற்றவர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பது தான் விதி. அதையும் மீறி சிரித்துவிட்டால், முதலில் மஞ்சள் கார்டை கொடுத்து அவர்களை எச்சரிக்கை செய்து, மீண்டும் சிரிப்பவர்களை சிவப்பு கார்டை கொடுத்து, நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றிவிடுகின்றனார். கடைசி வரை சிரிக்காமல் தாக்கு பிடிப்பவர்களுக்கே பரிசுகள்.
நிகழ்ச்சியை பார்க்கும் போது சிரிக்காமல் இருப்பது சுலபம் என்றே தோன்றினாலும், தான் சிரிக்காமல் மற்றவர்களை சிரிக்க வைப்பது சற்று கடினமாகவே தோன்றியது. அப்படி மற்றவர்களை சிரிக்க வைப்பதால் அவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்களும் கிடைக்கும்.
ஆரம்பத்தில் சற்று தொய்வாக நிகழ்ச்சி சென்றாலும் போகப்போக நாமும் நிகழ்ச்சியில் கலந்து விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும்.
இவர் எல்லாம் அவ்வளவு எளிதாக சிரிக்க மாட்டார் என்று நினைத்தவர்கள் எல்லாம் தாக்கு பிடிக்க முடியாமல் வெளியேறினர். நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே 1 மணி நேர முடிவில் 3 பேருக்கு மஞ்சள் கார்ட் கொடுக்கப்பட்டு, ஒருவர் வெளியேறவும் செய்தார்.
மற்றவர்களை சிரிக்க வைக்க கோமாளிகளை போல் வேடிக்கை உடைகளை அணிந்தும் முயற்சிகள் செய்தனர் போட்டியாளர்கள். நிகழ்ச்சியின் இடை இடையே வித்தியாசமான டாஸ்க்குகளும் கொடுக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சி தமிழில் ஒரு புது முயற்சியாக இருந்தாலும், ஒரு சில இடங்களில் மட்டுமே நம்மால் சிரிக்க முடிந்தது. இந்த புதிய சிரிப்பு வெடி, சரவெடி போல் வெடிக்கவில்லை என்றாலும், ஊசிப் பட்டாசுகள் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக வெடித்தது என்றே சொல்லலாம்.