குஜராத் மாநிலம் பரூச் பகுதியைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் அறிவிப்புதான் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
இந்தியாவின் தற்போதைய ஹீரோ தங்க மகன் நீரஜ் சோப்ரா தான். எங்கும் நீரஜ் எதிலும் நீரஜ் என்பது போல அனைத்து இடங்களிலும் நீரஜ் சோப்ரா பற்றிய பேச்சுக்கள் தான்.
இந்த நிலையில் நீராஜ் சோப்ராவுக்கு இன்டிகோ விமான நிறுவனம் இன்னும் ஒருவருடத்திகு விமானத்தில் பயணிக்க இலவசம் என அறிவித்துள்ளது. பிரபல கார் நிறுவனமான மகிந்திரா அவருக்கு சொகுசு கார் பரிசளிப்பதாக அறிவித்துள்ளது.
அதேபோல ஹரியானா மாநில அரசு 6 கோடி ரூபாய், பஞ்சாப் அரசு 2 கோடி ரூபாய், மணிப்பூர் அரசு, சிஎஸ்கே அணி நிர்வாகம், பிசிசிஐ ஆகியவை தலா 1 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளன.
இந்நிலையில் குஜராத் மாநிலம் பரூச் பகுதியைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் பங்கின் முன் வைத்துள்ள அறிவிப்பு பலகையில், ரூ .501 இலவசமாக பெட்ரோல் வழங்கப்படும்.
ஆனால் , ஒரு நிபந்தனை. இந்த இலவச பெட்ரோலை பெற வேண்டுமானால், சம்பந்தப்பட்ட நபரின் பெயர் நீரஜ் அல்லது நீரஜ் சோப்ரா என்று இருக்க வேண்டும்.
இதற்காக பெயர் குறித்த சான்றிதழை காண்பித்து இலவசமாக பெட்ரோலை வாங்கி செல்லலாம் என எழுதப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பார்த்த நீரஜ் மற்றும் நீரஜ் சோப்ரா என்ற பெயருடையவர்கள் இலவசமாக ரூ. 501 மதிப்பிலான இலவச பெட்ரோலை வாங்கிச் சென்றனர்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஆயுப் பதான், இந்த சலுகை 2 நாட்களுக்கு இருக்கும். தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை கவுரவிக்கும் வகையில், அசல் ஆணவங்களுடன் வருவோருக்கு பெட்ரோல் இலவசமாக வழங்கி வருவதாக கூறினர்.