தமிழர்களின் வரலாறு உயிர்த்து இருக்கும் இடங்களில் முக்கியமானவை கோவில்கள். தமிழகக் கோவில்கள்தான் பண்டைய தமிழர்களின் கணக்கியல் திறன், கட்டுமான அறிவு, கல்வியறிவு, பண்பாட்டு முதிர்ச்சி – ஆகியவற்றுக்கு சான்றுகளாக உள்ளன. தமிழக கோவில்களும், கல்வெட்டுகளும் இல்லை என்றால் தமிழர்களின் வரலாறு இன்னும் மோசமாகத் திரிக்கப்பட்டு இருக்கும்.
தமிழகக் கோவில்களில் உள்ள கல்வெட்டுகள் மீது இப்போது வெளிச்சம் பாயத் தொடங்கி இருக்கிறது. ஆனாலும் சிற்பங்கள் குறித்த ஆய்வுகள் இன்னும் தவழும் நிலையிலேயே உள்ளன, அவை சாமானியர்களைச் சென்று சேரவில்லை.
உலக நாடுகளின் அருங்காட்சியகங்கள் தமிழரின் சிற்பத் திறனை வியக்கும் நிலையில், தமிழர்களால் அவற்றின் அழகை அதிகம் பருக இயலவில்லை என்றால் அது தமிழர்களுக்குப் பேரிழப்பே. கோவில் சிற்பங்களை தமிழர் கலையின் ஒரு பங்காக எடுத்துக் கொண்டு, அவற்றை அறிய முயற்சிப்பவர்களுக்கு வழி காட்டுவதே இந்தத் தொடரின் நோக்கம் ஆகும்.
சிற்பங்கள் குறித்த சொற்கள் காலத்தால் சமஸ்கிருத மயமாக்கப்பட்டு உள்ளன. சொற்கள் மாற்றப்பட்டு இருந்தாலும் அவை நமது செல்வங்களே. பெருவுடையாரை பிரதீஸ்வரர் என்று மறுபெயரிட்டு அழைத்தாலும் அவர் தமிழர் கடவுளே. எனவே சிற்பக் கலை தொடர்பான சமஸ்கிருத சொற்களை வாசகர்கள் பொறுத்தருள வேண்டும்.
தமிழக கோவில் சிற்பங்கள் குறித்தும், தமிழரின் கலை நயம் குறித்தும் மிக நீண்ட ஆய்வுகளை மேற்கொண்ட மா.மாரிராஜன் அவர்கள், சிற்பக் கலை குறித்து மிக எளிமையாக விளக்கும் இந்தத் தொடர் நாளை முதல் வெளியாகின்றது.
- ஆசிரியர்