வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புகளை தமிழ் உட்பட 7 மொழிகளில் மாணவர்கள் கற்றுக் கொள்ளலாம் என மத்திய தொழில் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தற்போது கல்லூரிகளில் பொறியியல் பாடங்கள் அனைத்தும் ஆங்கில மொழியில் மட்டுமே நடத்தப்படுகின்றன. இதனால் பள்ளிகளில் தாய் மொழியில் கல்வி பயிலும் மாணவர்கள் கல்லூரியில் ஆங்கிலத்தில் மட்டுமே பொறியியல் பாடத்தை படிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
ஆனால் உலகின் பலநாடுகளிலும் மாணவர்கள் தங்கள் தாய் மொழியில் பொறியியல் படித்து வருகின்றனர். இலங்கையில் பல ஆண்டுகள் முன்பே பொறியியல் பாடங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன.
இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் மட்டும், சிவில், மெக்கானிக்கல் ஆகிய பாடப்பிரிவுகளில் தலா 900 இடங்களில், தமிழ் பயிற்று மொழி வகுப்புகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப்படியாக தமிழ், இந்தி, தெலுங்கு, குஜாராத்தி, மராத்தி, கன்னடம் உள்ளிட்ட 7 மொழிகளில் பொறியியல் பாடங்களை கல்லூரிகள் கற்பிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
- பிரியா வேலு