ஐபோன் 12 மினி கைபேசியுடன் சார்ஜரை கொடுக்காத ஆப்பிள் நிறுவனத்துக்கு பிரேசில் நாட்டு நுகர்வோர் அமைப்பு 20 லட்சம் டாலர் அபராதம் விதித்தது.
பிரபல கணினி மற்றும் கைபேசி தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் சமீபத்தில் தனது ஐபோன் 12 மினி வகை கைபேசிகளை உலகுக்கு அறிமுகப்படுத்தியது. முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபரிலேயே, ‘ஐபோன் 12 மினியுடன் சார்ஜரோ இயர் பட்களோ அளிக்கப்பட மாட்டாது. சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவே இந்த நடவடிக்கை’ – என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்தும் இருந்தது.
இந்நிலையில் பிரேசில் அரசின் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பான புரோகான் எஸ்பி, ‘பிரேசில் நாட்டின் நுகர்வோர் சட்டங்கள் வலிமையானவை. ஆப்பிள் அந்த சட்டங்களையும் நுகர்வோர் அமைப்புகளையும் மதிக்க வேண்டும்’ – என்று சொல்லி ஆப்பிள் நிறுவனத்துக்கு 20 லட்சம் அமெரிக்க டாலர்கள் என்ற பெரிய தொகையை அபராதமாகவும் வித்து உள்ளது.
ஒரு கைபேசியை விற்கும்போது அதற்கான சார்ஜரை கூடவே வைக்காமல் இருப்பது நுகர்வோரை ஏமாற்றும் செயல் என்பது பிரேசில் நாட்டு நுகர்வோர் அமைப்பின் வாதமாக உள்ளது. மேலும், ஐபோன் 12 கைபேசி அமெரிக்காவில் விற்கப்படும் விலையைப் போல 50% அதிக விலைக்கு பிரேசிலில் விற்கப்படுகின்றது. இதற்குக் காரணம் கேட்டபோதும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக விலை உயர்த்தி விற்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் கூறியது.
ஆப்பிள் நிறுவன கைபேசிகளின் விலையை குறைக்க இயலாத பிரேசில் அரசு அபராதங்களால் அந்தத் தொகையை திரும்பப் பெற முயற்சிக்கின்றது என்றும் இதனை சிலர் பார்க்கிறார்கள். ஆனால் ஆப்பிள் நிறுவனம் இது தொடர்பாக எந்தக் கருத்துகளையும் கூறவில்லை.. அதன் ஐபோன் 12 கைபேசி உலக அளவில் லட்சக் கணக்கான எண்ணிக்கையில் விற்றுக் கொண்டிருக்கின்றது, அதனால் ஆப்பிள் இந்த அபராதத்தையும் ஒரு விளம்பரமாகவே பார்க்கக் கூடும்.
– நமது நிருபர்.