மகசூல் – பயணத் தொடர் – பகுதி 6

பழங்குடி
SHARE

நான் ஏன் இவர்களோடு திரிகிறேன்?

காலை ஒரு பழங்குடி ஊரை (தெருக்களை) முழுமையாக சுற்றிப்பார்க்க முடிந்தது. ஆனால் மக்களின் எண்ணம் குறித்து புரிந்துகொள்வதற்கு இன்னும் நேரமெடுக்கும். 

அதற்குள் ஜன்பத் அலுவலகம் சென்றோம். காலையில் வந்த ஒருவர் இன்னும் நிர்வாக அதிகாரியைச் சந்திக்காமல் அவர் நிர்வகிக்கும் பகுதிகளுக்குள் சுற்றித் திரிவதா? இந்த தொனியில்தான் அந்த அழைப்பு வந்ததாக தகவல். அந்த ஜன்பத் சி.இ.ஓ.வைச் சந்திக்கத்தான் இங்கு வந்துள்ளோம். இங்குள்ள 109 கிராமங்களையும் நிர்வகிக்கும் அந்த ஜான்பாத்தின், தலைமை அலுவலர் ஒரு பெண் என்றார்கள்.

வைஜயந்தி மாலா ரேஞ்சுக்கு நினைத்துக்கொண்டு போனேன். TD (ட்ரைபல் டெவலப்மெண்ட்) ஆபிஸ் வாசலில் வெகுநேரம் நானும், அகிலேஷும் பேசிக்கொண்டிருந்தோம். அவர் அவருக்கு வராத ஆங்கிலத்திலும், நான் எனக்கு தெரியாத இந்தியிலும்.

அப்போதுதான் அறிமுகமானார் மீத் ராம். நெற்றியில் குங்கும திலகம். கையில் கயிறு என விநாயகர் சதுர்த்தி ஜோரில் இருந்தார்.

இந்த உலகம்தான் எவ்வளவு கொடுமையானது. இந்தி தெரியாதவனுக்கு இந்தியை தவிர ஏதும் தெரியாதவர்களை நண்பர்களாக்கிக் கொண்டே இருக்கிறது.

ஆனாலும் நான் இந்தி தெரியாதவன் என்பதை ஒப்புக்கொண்டு இந்தி பேச தொடங்கியதால், என் ஓட்டை இந்தியை சகித்துக்கொண்டார்கள்.. 

கடைசியில் அவர்களே ஆங்கிலத்தில் பேசினார்கள் என்றால் பார்த்துக்கொள்ளவும்.. 

திடீரென்று ஒருவர் வந்தார் மே நிதின் என்றார். இந்த நிதின்தான் என் பயணத்துக்காக உதவி செய்யும் பொருட்டு கெஸ்லாவில் ஏற்பாடுகள் செய்தவர். குறிப்பாக அகிலேஷை அனுப்பி வைத்தவர்.

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். திடீரென்று அந்த மாயாஜால உணர்வு வந்து போனது. (நாம யாரு, எப்படி இவங்க கூட சுத்திட்டு இருக்கோம்..)

அலுவலகத்துக்கு உள்ளே போனோம். நான் நினைத்திருந்த லேடி ஆபிசர் பிம்பமெல்லாம் உடைந்து, என் பக்கத்து வீட்டு சுஜி அண்ணியை நினைவு படுத்தியபடி அந்த அக்கா அமர்ந்திருந்தார். (ஆரம்பத்தில் எல்லார் முன்பும் மேடம் என்றேன். பிறகு பேச்சின் முடிவில் தீதி என்றே அழைத்தேன்)

அவருக்கு, இப்படி ஓருவன் வருகிறான், பழங்குடிகளை சந்திக்க போகிறான் என்ற தகவல் முன்பே தெரியும். ஆனால், இப்போதுதான் என்னை சந்திக்கிறார். 

என்னைப்போலவே அவருக்கும் என்மீது வேறு பிம்பம் இருந்து , என்னை பார்த்ததும் அது உடைந்திருக்கிறது என்பதை உணர முடிந்தது. பேசினோம்… பேசினோம்… 

நான் வேறு, படிக்கப்போவதாய் சொல்லியிருக்கிறேன் (ஆம். சமுக சேவையில் முதுகலை படிக்கப்போவதாய் சொல்லித்தான் இந்த பயணத்திற்கான ஏற்பாடுகளே நடந்தன.) 

படிக்கிற பிள்ளை என்பதால் மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டு சில தகவல்களையும், பழங்குடி இனத்தை புரிந்து கொள்வதற்கான சில தந்திரங்களையும் தெளிவுபடுத்தினார். 

பிறகு விடைபெற்று, நான், அகிலேஷ், மீத்ராம் என மூவருமாகக் கிளம்பினோம். எங்கு போகிறோம் என்பது சத்தியமாக எனக்குத் தெரியாது. சரி அடுத்த கிராமம் போகிறோம் என்று நினைத்தேன். ஆனால், அது விருந்துக்கான நேரம். 

நேராகப் போய் ஒரு தாபாவில் நின்றது வண்டி. இங்கு எதைச் சாப்பிட்டாலும் அது எனக்குப் புதிய உணவுதான். இதில் தேர்வென்ன வேண்டி இருக்கிறது? நீங்களே சொல்லுங்கள் என்றேன். ஜீரா ரைஸ் ஓகேவா என்று கேட்டார்கள். ஓகே என்றேன். உடன் வேறு சிலவற்றையும் ஆர்டர் செய்தனர்.

ரொட்டி, சப்ஜி, ஜீரா ரைஸ், மீன், வெங்காயம்+பச்சைமிளகாய்+ஊறுகாய் என தட்டுகள் அடுக்கப்பட்டன. நிஜமாகவே நல்ல ருசி. விரும்பி உண்டேன். கண்ணுக்குக் குளிர்ச்சியான இடத்தில், சுற்றி காடுகள் இருக்க அதன் நடுவே கயிற்றுக் கட்டில் போட்டு சாப்பிடுவதை நான் எனக்கு நடக்கும் என்று இதுவரையில் நினைத்ததில்லை. ஆனால், இங்கு நடந்து கொண்டிருந்தது.

சாப்பிட்ட கையோடு கிளம்பினோம்.  இந்த முறை வேறொரு கிராமத்துக்குத்தான். இங்கு கோர்க்கூ பழங்குடிகள் வாழ்வதாகச் சொன்னார்கள். சிமெண்ட் சாலைகள் போடப்பட்டிருந்தன. இந்த ஊருக்குள் நுழையும்முன் இந்த ஏரியா கவுன்சிலரைச் சந்தித்து என்னை அறிமுகப்படுத்தினார். பின் உள்ளே போனோம். 

முதலில் ஒரு பள்ளிக்கூடம். நம்ம ஊரில் அங்கன்வாடி என்று சொல்லலாம். பழங்குடிகள் வளர்ச்சிக்காக இந்தப் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள மாதிரிப் பள்ளி அது. மரங்களோடு வாழ்ந்து புரிந்து கொள்ளும் வாய்ப்புள்ளவர்களின் பிள்ளைகளுக்கு,  மரங்களை  அட்டைப்படமாக மட்டும் அறிமுகப்படுத்தும் விதமாக இருந்தது அந்தப் பள்ளியின் உள்ளமைப்பு. ஒரே ஒரு வித்தியாசம்தான். பாடசாலைக்கு ஒரு சிறிய கட்டிடம், அதைவிடப் பலமடங்கு அகன்றதாக இருந்தது பள்ளியின் இடம். சரி இன்னும் கட்டுவார்கள் போல. 

அங்கிருந்த ஆசிரியரிடம் பேசினோம். இந்த இடத்தில் ஒரே ஒரு மாதிரிப்பள்ளி இதுதான். விளையாட்டு மூலமாக கல்வியை கற்பிக்கும் முறைதான் என் பயிற்றுமுறை. குழந்தைகளும் என்னிடம் நன்றாகவே பழகுகிறார்கள். எனக்கும் இது பிடித்திருக்கிறது என்றார். கேட்க மகிழ்ச்சியாகவே இருந்தது. 

அடுத்ததாக அந்த ஊரின் எல்லை வரை போக வேண்டும் என்றார். போகப் போகத்தான் புரிந்தது. அந்த ஊரின் எல்லை ஒரு முட்டுச் சந்து. பிரம்மாண்டமான மலை ஒன்று மறித்து நிற்கிறது. இந்த மலைக்கு அந்தப் பக்கம் தவா நதி ஓடுகிறதாம். பாலச்சந்தரின் தண்ணீர் தண்ணீர் படத்தில் வருவது போல, இந்த மலையைக் குடைந்தால் இந்த ஊருக்குத் தண்ணீர் கொண்டு வந்து விடலாம் என்று தோன்றியது. 

ஆம். இந்த ஊரில் தண்ணீர்ப் பிரச்சினை உண்டு. வாரம் ஒருமுறை பொதுக் குழாயில் வரும் தண்ணீர் தான் இவர்கள் பயன்பாட்டுக்கு. மற்றபடி இவர்களது விவசாயமெல்லாம் 100% மழையை மட்டுமே சார்ந்திருக்கிறதாம். 

கடைசி வரை அந்த ஊரின் சர்பஞ்ச்சைப் பார்க்கவேயில்லை. மறித்து நிற்கும் மலையை மனதில் படம்பிடித்தபடி மீண்டும் கெஸ்லா ஜன்பத் அலுவலகத்துக்கு வந்தோம். இப்போது மீண்டும் அந்த ஜன்பத் சி.இ.ஓ. வெளியே கிளம்பி வந்தார். ஏதோ வேலையாகப் போகிறாரோ என்று நினைத்தேன். கையசைத்து எங்களையும் உடன் வரும்படி அழைத்தார். 

மறுகேள்வியே இல்லை. கிளம்பி விட்டேன். நடந்தே போனோம். ஒரு 50 அடி தூரத்தில் ஜன்பத் அலுவலகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வரும் பள்ளிக் கூடம் இருந்தது. செயற்கையாக வடிவமைக்கப்பட்டதுதான் என்றாலும், அந்த பள்ளிக்குள் அமைக்கப்பட்டிருந்த தோட்டம் அவ்வளவு அழகானது. ஆனால், குரோட்டன்ஸ் வகை அலங்காரச் செடிகளை நான் ஒருபோதும் மதித்ததில்லை.  வகுப்புகளுக்குள் நுழைந்தோம். அது 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்து கொண்டிருந்த ஆங்கில வகுப்பு. இந்த சி.இ.ஓ. உள்ளே நுழைந்ததும் மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று வழக்கமான தொனியில் ‘குட் ஈஈஈவ்னிங்’ சொன்னார்கள். இது மட்டும் எங்கும் மாறமாட்டேன் என்கிறது. 

உள்ளே நுழைந்ததும் சாக்பீசை எடுத்துக் கொண்டார். தாமாகவே அந்த ஆசிரியர் ஒதுங்கினார். மாணவர்களோடு ஜாலியாகப் பேசத் தொடங்கினார். அவர்களும் சிரித்தபடி பதில் பேசினார்கள். பின்னர் ஆங்கிலத்தில் யார் யாருக்கெல்லாம் அவரவர் பெயரை எழுதத் தெரியும் என்று கேட்டார்.

சிலர் கை உயர்த்தினர். சிலர் அரைகுறையாக உயர்த்தினர். பிறகு ஒருவனை அழைத்து எழுதச் சொன்னார். தவறாக எழுதிய போதும் அவனைப் பாராட்டினார். இப்போது அரைகுறைக் கைகளுக்கு இன்னும் கொஞ்சம் தைரியம் வந்திருக்கக் கூடும்.  

இப்படியாக வகுப்பு முடிந்து பள்ளியைச் சுற்றிப் பார்த்தோம். காய்கறித் தோட்டம், பழத்தோட்டம் என்று நான் படித்த பள்ளியில் தோற்றுப்போன சில முறைமைகள் இங்கே வென்றிருந்தன. ஆனால், எனக்கு ஒரு மன உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. இந்தப் பள்ளிக்குள் நுழைந்தது முதல், நான் பெண் குழந்தைகளைப் பார்க்கவேயில்லை. 

நெடுநேரம் உள்ளே கிடந்த கேள்வியை, பள்ளியை விட்டு வெளியே வந்த உடன் கேட்டேன். இந்தக் கேள்வியை எதிர்பார்த்தது போன்ற சிரிப்புடன், பதில் சொன்னார்.  

“அது பக்கத்தில் வேறொரு இடத்தில் இருக்கிறது”. 

இந்தப் பிரிப்பு குறித்து எனக்குத்  தோன்றிய எந்தக் கேள்வியையும் நான் கேட்கவில்லை. கேட்க விரும்பவில்லை.

பின்னர் அலுவலகம் சென்றோம். அவர் பேச ஆரம்பித்தார். 

“என்ன பார்த்தீர்கள். நீங்கள் கவனித்தது என்ன ?”

மெல்லப் பேச ஆரம்பித்தேன். நான் அவரை ஆச்சரியப்படுத்துகிறேனா என்று தெரியவில்லை. ஆனால், நான் சொல்வதை புதிய செய்தியைக் கேட்பதைப் போலக் கேட்டார். இறுதியாக இவர்களின் பாரம்பரிய வாழ்முறை பாதிக்கப்படுமோ என்ற அச்சம் இருக்கிறது என்றும் சொன்னேன். இப்போது அவர் பேசத் தொடங்கினார். 

ஒன்றை முதலில் புரிந்து கொள்ளுங்கள். உற்பத்தி செய்யும் இடங்களில் ஒரு பண்டத்தின் மதிப்பு குறைவாகவே இருக்கும். அதன்மீது மிகை விலை ஏற்றப்படுகிறது என்றால், அந்தப்பொருள் பயணப்பட்டோ, அல்லது மதிப்பு கூட்டப்பட்டோ வந்திருக்க வேண்டும். 

ஆனால், இந்தப் பகுதியின் பழங்குடி வாழ்வில் மிகைவிலை தான் எல்லாம். இங்கு அடிப்படையாகப் புரிந்து கொள்ள வேண்டிய முதல் விடயம் அவர்களது பொருளாதார வறுமையாம்.

இவர்கள் உற்பத்தி செய்வார்கள். உண்பார்கள். ஆனால், பெருமளவு விற்பதில்லை. விற்றாலும் விலைகுறித்து கவலைப்படுவதில்லை. வந்தவில்லைக்குத் தள்ளிவிட்டு அந்த நாளைக் கடத்துகிற பழக்கம் உண்டு. 

அதுபோக ஏற்றுமதி இறக்குமதிக்கு அல்லது குறைந்தப்ட்சம் அவர்களது பொருட்களைச் சந்தைப்படுத்துவற்கும் கூட எந்த வாய்ப்பும் இன்று வரை இந்த பகுதிகளில் அமைக்கப்படவில்லை. இவர்கள் உற்பத்தி செய்யும் தானியங்களை தவிர்த்த மற்ற எல்லாப்பொருட்களும் இவர்களுக்குக் கிடைக்கும்போது, மிகைவிலை ஏற்றப்பட்ட பொருளாகத்தான் கிடைக்கும். (அருகே உற்பத்தியானாலும் )

இதற்கும் – இந்த மிகைவிலைக்கும் – சேர்த்து உழைக்க வேண்டி இருப்பதால், பழங்குடி மக்கள் வெவ்வேறு வேலைகள் செய்யத் தொடங்குகின்றனர். இந்த புள்ளியில்தான் இவர்களது மரபறிவு கெடுகிறது. இரண்டாவதாக வெளி உலகத்தோடு ஒப்பிட்டுக்கொண்டு தங்களை அவர்களைப்போல அலங்கரித்துக்கொள்வதற்கும் ஆசை வருகிறது. 

உழைப்பு மற்றும் உள்ளூர் சூழலை 100 சதவீதம் பயன்படுத்துதல் என்பதுதான் பழங்குடி சமூகத்தின் தனிச்சிறப்பு. ஆனால், அண்மைக்கால மாற்றங்கள் இந்த இரண்டையும் இல்லாமல் செய்துவிடுகின்றன. இவர்களது வாழ்க்கயைப் புரிந்து கொள்ளும் முன்பு இவைகளையும் கவனிக்க வேண்டும். பெரும்பாலும் இங்கு வருபவர்கள் பழங்குடிகளின் நூறாண்டுக்கு முந்தைய கதைகளை வாசித்துவிட்டு வருகிறார்கள். நிலைமை வேறாக இருப்பது அவர்களுக்கு அழிவு போலத் தோன்றுகிறது. 

நாளை வரும்போது மரியா, கோண்டு, கோர்க்கூ பழங்குடிகளை சந்திக்க வேண்டும் என்று சொன்னேன். நானும் சில தகவல்களோடு நாளை வருகிறேன். சந்திப்போம் என்று சொன்னார். இருவரும் கிளம்பினோம். 

அதே சமயம் சமந்தாக்கியா, பிபாரியாகோத், சாத்பூரா, சீத்தாபூரா, தாக்கூ ஆகிய பழங்குடிகளையும் பார்த்தால் ஒப்பிட்டு புரிந்துகொள்ள உனக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று வேறு ஆலோசனைகள் சொன்னார் அக்காவாகிய ஜான்பாத் சிஇஓ. அக்கா என்றே சொன்னதால் வந்தனா என்ற அவரது பெயரை சொல்ல மறந்து விட்டேன். 

நாளைய சம்பவம் எங்களில் யாரும் எதிர்பாராதது. வந்தனா மேடம் உட்பட.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 7: தொழிற் கை முத்திரையின் வகைகள் (17 – 20)

பிக்பாஸ் நாட்கள். நாள் 12: ‘எல்லாம் நாடகம்!’

இரா.மன்னர் மன்னன்

‘மரணத்தின் விலை’ – புதிய சஸ்பென்ஸ் திரில்லர் தொடர்கதை நமது மெய் எழுத்து தளத்தில் வெளியாகிறது

இரா.மன்னர் மன்னன்

சிற்ப இலக்கணம். பகுதி 4. தொழிற் கை முத்திரையின் வகைகள் (5 – 8)

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி 1: சிற்ப இலக்கணம் ஒரு அறிமுகம்.

சிற்ப இலக்கணம் தொடர். பகுதி: 11. 4 வகை எழிற்கை முத்திரைகள்

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள். நாள்: 22 “தலைவர் மதுமிதா!”

இரா.மன்னர் மன்னன்

பிக் பாஸ் நாட்கள். நாள் 17: ‘பிரியங்காவின் போங்காட்டம்’

இரா.மன்னர் மன்னன்

நல்லாசிரியர் விருது இவர்களுக்கு மட்டும் தான்… தமிழக அரசு அதிரடி

Admin

பிக் பாஸ் நாட்கள். நாள் – 20. “பல்லைப் பிடுங்கிய கமல்”

இரா.மன்னர் மன்னன்

பிக் பாஸ் நாட்கள். நாள் 28. ‘வெளியேறினார் சின்னப்பொண்ணு’

இரா.மன்னர் மன்னன்

”எதிர்பாராத விபத்து..!”. மரணத்தின் விலை – தொடர். அத்தியாயம் 3.

இரா.மன்னர் மன்னன்

2 comments

மகசூல் - பயணத்தொடர் - பகுதி 7 - Mei Ezhuththu September 14, 2021 at 12:23 pm

[…] மகசூல் – பயணத் தொடர் – பகுதி 6 […]

Reply
அரவிந்தன் வே September 14, 2021 at 4:18 pm

👏

Reply

Leave a Comment